தேனி
அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பு: கடைகளில் தரமற்ற உணவு விற்பனை செய்வதாக புகார்
|அய்யப்ப பக்தர்கள் வருகையையொட்டி தமிழக எல்லை கடைகளில் தரமற்ற உணவு விற்பனை செய்வதாக பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி கேரள மாநிலம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநில பக்தர்களும் இந்த கோவிலுக்கு இருமுடி கட்டி சென்று வருகின்றனர். அந்த வகையில் கோவிலுக்கு செல்லும் பிரதான மலை பாதையில் ஒன்றான தேனி மாவட்டம் கூடலூர், லோயர்கேம்ப், குமுளி மலைப்பாதை வழியாக அய்யப்ப பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் செல்கின்றனர். தற்போது பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்கள் கூடலூர், கம்பம் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் தனியார் சிலரால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளில் உணவு சாப்பிடுகின்றனர். ஆனால் அந்தப் பகுதிகளில் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக அய்யப்ப பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும் சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இந்த கடைகளில் தரமான உணவு, குடிநீர் வழங்குவதை உணவுப் பொருள் தர கட்டுப்பாட்டு துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.