< Back
மாநில செய்திகள்
தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிப்பு

தினத்தந்தி
|
10 Aug 2024 7:20 AM IST

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின்பதவிக் காலம் இன்றுடன் (சனிக்கிழமை) நிறைவு பெற உள்ளது.

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பொறுப்பை உயர்கல்வி செயலாளர் தலைமையில் அமைக்க ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்து இருக்கிறது.

ஏற்கனவே சென்னை பல்கலைக்கழகம், மதுரை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவி காலமும் நிறைவு பெறுவதால், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரிக்கிறது.

பொதுவாக துணைவேந்தர் பதவி காலம் நிறைவு பெற்றதும், அந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாகக் குழு அமைக்கப்படும். அந்தவகையில் அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாகக்குழு தொடர்பான அறிவிப்பு இன்று இரவுக்குள் வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜூவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணைவேந்தர் தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறி வருகிறார். ஆனால் தமிழக அரசு பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை நியமிக்க கூடாது என கூறி வருகிறது. இந்த மோதல் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறாமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்