கோவையில் லாட்டரி அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை..!
|கோவையில் லாட்டரி அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கோவை,
கோவை துடியலூர் அடுத்த வெள்ளக்கிணர் பகுதியில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணிக்கு அவரது வீட்டிற்கு 2 கார்களில் கேரளாவில் இருந்து 11 வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அதன்பின்னர் மார்ட்டின் வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள் யாரும் உள்ளே வராதபடி வீட்டின் நுழைவு வாயிலையும், வீட்டில் உள்ள கதவுகளையும் மூடினர். வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி கொண்டனர்.
பின்னர் வீட்டிற்குள் உள்ள ஒவ்வொரு அறையையும் சில மணி நேரங்களில் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் எடுத்து கொண்டனர். பின்னர் மார்ட்டின் வீட்டின் அருகே உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோல் காந்திபுரம் 6-வது வீதியில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
வருமான வரித்துறை சோதனையை முன்னிட்டு, மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன்பு துப்பாக்கிய ஏந்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.