< Back
மாநில செய்திகள்
கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
மாநில செய்திகள்

கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

தினத்தந்தி
|
15 April 2024 8:56 PM IST

கோவை தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை,

தமிழகத்தில் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் மற்றும் மத்திய மண்டல தலைவராக பணியாற்றி வருபவர் மீனா லோகு. சிவானந்தா காலனி பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மூன்று கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இருப்பினும், இந்த சோதனையில் ஆவணங்கள், பணம் ஏதும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்