திண்டுக்கல்
தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
|வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக, தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
தனியார் கட்டுமான நிறுவனம்
மதுரை மாவட்டம் கோச்சடை விசாலாட்சி நகரை சேர்ந்தவர் முருகப்பெருமாள். இவர் ஆர்.ஆர்.இன்ப்ரோ என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகம், நத்தம் அருகே கோசுக்குறிச்சி கரையூர் பகுதியில் உள்ளது.
தற்போது அந்த நிறுவனத்தின் மூலம் மதுரை-நத்தம்-துவரங்குறிச்சி நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணி அளவில், கரையூரில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் 3 பேர் போலீசாருடன் வந்தனர்.
வரி ஏய்ப்பு புகார்
பின்னர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்த ஆவணங்களை வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.
மேலும் கட்டுமான நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகள் குறித்த ஆவணங்களை வருமான வரித்துறையினர் கேட்டறிந்தனர். காலை தொடங்கிய சோதனை மாலை வரை நீடித்தது.
கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி
இதேபோல் ஒட்டன்சத்திரம் அருகே சின்ன கரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி ஆகிய இடங்களில் அந்த நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் சின்னகரட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்குவாரிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மார்க்கம்பட்டியில், தார் மிக்ஸ் செய்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனங்களுக்கு நேற்று காலை 10 மணி அளவில், மதுரையில் இருந்து வந்த வருமானவரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட குவாரிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு மற்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் பேரில் சோதனை நடத்தியதாக வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.