கரூர்
கரூரில் என்ஜினீயர் வீடுகள் உள்பட 7 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை
|கரூரில் அரசு ஒப்பந்ததாரர், என்ஜினீயர் வீடுகள் உள்பட 7 இடங்களில் மீண்டும் வருமான வரி சோதனை நடந்தது.
வருமான வரித்துறை சோதனை
தமிழகத்தில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மீது வரி ஏய்ப்பு புகார்கள் வருமான வரித்துறைக்கு வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 26-ந்தேதி அவர்களுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமார் வீடு, அமைச்சரின் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றது. இதையடுத்து கோவை சாலையில் உள்ள உணவகம் மற்றும் வீடு, அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
அமலாக்கத்துறை
இந்நிலையில் சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13-ந்தேதி சோதனை நடத்தினர். பின்னர் நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் செந்தில்பாலாஜியை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது இருதய நாளங்களில் அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சென்னை காவிரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்று தற்போது சிகிச்சையில் உள்ளார்.
மீண்டும் சோதனை
இந்நிலையில் கரூரில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களான கரூர்-ஈரோடு சாலை, கோதை நகர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சக்தி மெஸ் உணவக பங்குதாரர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையொட்டி சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 9 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சீல்கள் அகற்றம்
இதேபோல் பழனியப்பா நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் மேற்கு காமராஜபுரம் பகுதியில் உள்ள என்ஜினீயர் பாஸ்கரன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை வருமான வரித்துறை சோதனையின் போது இந்த இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து சென்றிருந்தனர். தற்போது சீல் வைக்கப்பட்ட இடங்களில் சீலை அகற்றி மீண்டும் சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
பரபரப்பு
இந்நிலையில் கோதை நகரில் உள்ள சக்தி மெஸ் உணவக பங்குதாரர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் வீடுகள், மேற்கு காமராஜபுரம் பகுதியில் உள்ள என்ஜினீயர் பாஸ்கரன் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை மதியம் நிறைவடைந்தது. அரசு ஒப்பந்தத்தாரர் சங்கர் ஆனந்த் வீட்டில் நடந்த சோதனை மாைலயில் நிறைவடைந்தது.
7 இடங்கள்
இதையடுத்து கரூர் வையாபுரி நகரில் உள்ள ஆடிட்டர் அலுவலகம், கரூர் ஜவகர் பஜாரில் ஒரு நகைக்கடை, காளிப்பாளையத்தில் உள்ள பெரியசாமி என்பவரது வீட்டிலும் வருமானத்துவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனா்.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 7 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட குறிப்பிடத்தக்கது. கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.