விருதுநகர்
முன்னாள் ராணுவ வீரர் உள்பட 5 பேர் சிக்கியது எப்படி?
|அருப்புக்கோட்டையில் 7 பேர் கும்பலால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சிக்கிய 5 பேரில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் 7 பேர் கும்பலால் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் சிக்கிய 5 பேரில் ஒருவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார்.
கூட்டு பாலியல் பலாத்காரம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தனது உறவினர் இல்ல நிகழ்ச்சிக்காக விருதுநகர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்புவதற்காக விருதுநகர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அப்பெண்ணின் நண்பரான கரிசல்குளத்தை சேர்ந்த முத்துச்செல்வம், காரில் வந்தார். அந்த பெண்ணை தனது காரில் ஏற்றி சென்றார்.
இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே பாலவனத்தம் கோபாலபுரம் சாலையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு காரில் வந்த 7 பேர் கும்பல், முத்துச்செல்வத்தை தாக்கிவிட்டு அந்த பெண்ணை மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அவரது நகையை பறித்துச்சென்ற சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
5 பேர் சிக்கினர்
அந்த கும்பல் தாக்கியதில் சாலையோரம் காயமடைந்து கிடந்த முத்துச்செல்வத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து முத்துச்செல்வம் அளித்த தகவலின் பேரில் தாலுகா போலீசார், ராமானுஜபுரம் நான்கு வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முத்துச்செல்வம் கூறிய அடையாளங்களுடன் வந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.
மற்ற 5 பேர் பிடிபட்டனர். அருப்புக்கோட்டை துணை சூப்பிரண்டு சகாயஜோஸ், ராஜபாளையம் துணை சூப்பிரண்டு ப்ரீத்தி தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
முன்னாள் ராணுவ வீரர்
பிடிபட்டவர்கள் கோவிலாங்குளத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 42), பேரையூர் அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் (23), ராம்குமார் (20), அழகுராஜ் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதில் சீனிவாசன், முன்னாள் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைப்பு
மேலும் சீனிவாசன் உள்பட 3 பேர் ஒரு வழக்கு விசாரணைக்காக அருப்புக்கோட்டை கோர்ட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற 4 பேரும் வந்தனர்.
பின்னர் திரும்பிச் செல்லும்போது, சாலையோரம் முத்துச்செல்வமும், அந்த பெண்ணும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இந்த கொடூர செயலை அரங்கேற்றி உள்ளனர் என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கைதான சீனிவாசன், ஜெயக்குமார், ராம்குமார், அழகுராஜ் ஆகியோரை அருப்புக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருதுநகர் சிறையில் அடைத்தனர். மேலும் சிறுவனை சிறார் சிறையில் அடைத்தனர்.
மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரும் அண்ணன், தம்பி என கூறப்படுகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.