'துணிவு' படம் பார்க்க சென்றபோது சம்பவம்: லாரியில் ஏறி ஆட்டம்போட்ட அஜித் ரசிகர் தவறி விழுந்து சாவு
|‘துணிவு’ படம் பார்க்க வந்த அஜித் ரசிகர், உற்சாகத்தில் ஓடும் லாரியில் ஏறி ஆட்டம்போட்ட போது தவறி விழுந்தார். இதில் முதுகு தண்டுவடம் உடைந்ததால் பரிதாபமாக இறந்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த 'துணிவு', நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.
படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள 'ரோகிணி' தியேட்டரில் 'துணிவு', 'வாரிசு' ஆகிய 2 படங்களும் வெளியிடப்பட்டது. இதில் 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கும், 'வாரிசு' படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கும் வெளியானது.
'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து அஜித் ரசிகர்கள் 'ரோகிணி' தியேட்டரில் குவிந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ஜானகிராமன் என்பவருடைய மகன் பரத்குமார் (வயது 19). ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அஜித் ரசிகரான பரத்குமாரும் 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக தனது நண்பர்களுடன் 'ரோகிணி' தியேட்டருக்கு வந்திருந்தார். திரையரங்கிற்குள் ரசிகர்களை அனுமதிப்பதற்கு முன்பு தியேட்டர் வளாகத்தில் அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து, ஆட்டம், பாட்டம் என உற்சாகத்துடன் இருந்தனர்.
அந்த பகுதி முழுவதும் அஜித் ரசிகர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் தியேட்டர் முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி சென்றது.
அப்போது உற்சாக மிகுதியால் பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். பின்னர் பரத்குமார் கீழே இறங்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் அவரது முதுகு தண்டுவடம் உடைந்துபோனதால் வலியால் துடித்தார்.
இதை பார்த்து அவரது நண்பர்களும், படம் பார்க்க தியேட்டருக்கு வந்திருந்த அஜித் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பரத்குமாரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பரத்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். பலியான பரத்குமார், துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவரது தந்தை ஜானகிராமன், கூலி வேலை செய்து வந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவரான பரத்குமார், கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேரமாக ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அஜித்தின் தீவிர ரசிகரான அவர், 'துணிவு' படத்தை முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என வந்தபோது பலியாகி விட்டது தெரிந்தது. நள்ளிரவில் கன்டெய்னர் லாரி மீது ஏறி ரசிகர்கள் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான பரத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு 'துணிவு' படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க ரோகிணி திரையரங்கில் குவிந்து இருந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தனர். அதில் நெருப்பு பொறிபட்டு அங்கு இருந்த விஜயின் 'வாரிசு' பட பேனர் லேசாக தீப்பிடித்தது. பதிலுக்கு 'துணிவு' படத்துக்காக வைக்கப்பட்டு இருந்த அஜித்தின் பேனர்களை, விஜய் ரசிகர்கள் கிழித்தனர்.
இதற்கிடையில் 'வாரிசு' படபேனர்கள், கட்-அவுட்டுகளை சிலர் அடித்து நொறுக்கி, கிழித்து விட்டு தியேட்டருக்குள் படம் பார்க்க சென்று விட்டனர். அதிகாலை 4 மணிக்கு விஜயின் 'வாரிசு' பட சிறப்பு காட்சியை பார்க்க வந்த விஜய் ரசிகர்கள், அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அஜித் ரசிகர்கள்தான் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பார்கள் என கருதி தியேட்டருக்குள் அதிரடியாக நுழைய முயன்றனர். அவர்களை தியேட்டரில் இருந்த பாதுகாவலர்களும் போலீசாரும் தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் தியேட்டரின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அதிரடியாக தியேட்டருக்குள் நுழைந்தனர்.
தியேட்டருக்குள் நுழைந்த விஜய் ரசிகர்களை, போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்ததால் அந்த பகுதி முழுவதும் கலவரம் போல் காட்சி அளித்தது. விஜய் ரசிகர்கள் கையில் இருந்த கட்டைகளை கொண்டு கண்ணாடி கதவுகளையும் அடித்து உடைத்தனர். இதனை தடுக்க வந்த போலீசாரையும் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்து விட்டனர். பின்னர் 'துணிவு' பட சிறப்பு காட்சி முடிந்து அஜித் ரசிகர்கள் மற்றொரு வழியாக வெளியே சென்றனர். அதன்பிறகு விஜய் ரசிகர்கள் படம் பார்க்க தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள திரையரங்கில் 'வாரிசு' படம் வெளியானது. இதற்காக விஜய் ரசிகர்கள் கட்-அவுட், பேனர்களை வைத்து பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விஜய் ரசிகர்கள் பட்டாசுகளை கையில் பிடித்து வெடித்தபடி இழுத்து வந்தனர். எதிர்பாராதவிதமாக திரையரங்கத்தின் வெளியே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கியாஸ் பலூன்கள் மீது பட்டாசு தீப்பொறி பட்டதால் கியாஸ் பலூன்கள் 'டமார்' என பயங்கர சத்தத்துடன் வெடித்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் ரசிகர்கள் அலறி அடித்து ஓடினர். இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. உடனடியாக அங்கிருந்த அனைவரையும் போலீசார் அப்புறப்படுத்தினர். பலூன் விற்பனையில் ஈடுபட்டவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.
'துணிவு' படம் பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் மற்றும் 'வாரிசு' படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்கள் மாறி, மாறி கோசம் போட்டனர். பின்னர் இருதரப்பினரும் ஒன்றாக சேர்ந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.