உதவி ஜெயிலர் வீட்டில் தீ வைத்த சம்பவம்: கைதான 3 பேருக்கு போலீஸ் காவல் - கோர்ட்டு உத்தரவு
|கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர்,
கடலூரில் உதவி ஜெயிலர் குடும்பத்தினரை தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில் சிறையில் உள்ள 3 பேரை ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மத்திய சிறை உதவி ஜெயிலர் மணிகண்டன் என்பவர் வீட்டில் கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவுடி எண்ணூர் தனசேகரன் சிறையில் இருந்தபடியே திட்டம் தீட்டி கூலிப்படை மூலம் வீட்டுக்கு தீ வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கைதி தனசேகரனுக்கு சிறைக்காவலர் செந்தில்குமார் உதவியாக இருந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மனு (எ) மனபாலன், கார்த்திக் மற்றும் இளந்தமிழன் ஆகியோர் கடந்த வாரம் பட்டுக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் இந்த மூன்று பேரையும் ஒருநாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி கடலூர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.