பெட்ரோல் ஊற்றி காதலன் மீது தீ வைத்த சம்பவம்: காதலியும் உயிரிழப்பு
|காதலிக்க மறுத்ததால் சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ்(வயது 24). பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா(22). இவர் மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்துவந்தார். ஆகாசும், சிந்துஜாவும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவதையும், சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். கடந்த 9-ந் தேதி பூம்புகார் கடற்கரை பகுதியில் ஆகாஷ், சிந்துஜா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறை வந்துள்ளனர். காவிரி பாலக்கரை என்ற இடத்தில் வந்தபோது ஆகாஷ் தன்னை தொடர்ந்து காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஆகாஷ் மீதும், தன் மீதும் ஊற்றிக் கொண்டு தீ வைத்தார்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 14-ந்தேதி ஆகாஷ் உயிரிழந்தார். இந்தநிலையில் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிந்துஜாவும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.