சென்னை
அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் சம்பவம்: வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
|அமைந்தகரையில் பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை சேத்துப்பட்டு, வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவரது அலுவலகம் அண்ணாநகரில் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஆறுமுகம், அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அமைந்தகரை அடுத்த செனாய்நகர் அருகே சென்றபோது. 3 மோட்டார் சைக்கிள்களில் இவரை பின்தொடர்ந்து வந்த 6 பேர் திடீரென ஆறுமுகத்தை வழி மறித்து நின்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயன்றனர்.
உடனே ஆறுமுகம், சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஓடினார். ஆனாலும் மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஆறுமுகம் சாலையிலேயே சரிந்து விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள், ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆறுமுகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த அமைந்தகரை போலீசார் கொலையான ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு கொலையாளிகள் மோட்டார்சைக்கிளில் தப்பிச் செல்லும் காட்சிகளை அந்த வழியாக காரில் சென்ற ஒருவர் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால்தான் ஆறுமுகம் கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என அமைந்தகரை போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல் மாங்காடு அடுத்த பரணிபுத்தூரைச் சேர்ந்தவர் தங்கதுரை (47). இவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் தங்கி, அந்த பகுதியில் உள்ள கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி கோயம்பேடு பஸ் நிலைய வளாகத்தில் தலையில் காயங்களுடன் மயங்கிய கிடந்த தங்கதுரையை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது குடிபோதையில் வந்த நபர் ஒருவர் தங்கதுரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கீழே தள்ளுவதும், இதில் தலையில் காயம் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்ததும் தெரிந்தது.
இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தங்கதுரை, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கோயம்பேடு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். மேலும் தங்கதுரையை அடித்துக்கொலை செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.