< Back
மாநில செய்திகள்
பெங்களூருவில் நடந்த சம்பவம்: வி.கே.குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண்  பரபரப்பு தகவல்கள்
மதுரை
மாநில செய்திகள்

பெங்களூருவில் நடந்த சம்பவம்: வி.கே.குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண் பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
9 Sept 2023 2:30 AM IST

பெங்களூருவில் வி.கே. குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண் அடைந்தனர்.


பெங்களூருவில் வி.கே. குருசாமியை வெட்டிய 3 பேர் மதுரை போலீசில் சரண் அடைந்தனர்.

முன்விேராதம்

மதுரை காமராஜர்புரம் கீழ்மதுரை ரெயில்வே நிலையம் பகுதியை சேர்ந்தவர் வி.கே.குருசாமி. தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டிக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக இருதரப்பினரும் மோதி கொண்டு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த வழக்கில் வி.கே.குருசாமி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மதுரை மாவட்ட கோர்ட்டில் குருசாமி வழக்கு ஒன்றில் ஆஜராகி விட்டு பெங்களூரு சென்றார். அதை அறிந்த ராஜபாண்டி தரப்பை சேர்ந்த வெள்ளைக்காளியின் கூட்டாளிகள் பெங்களூருவுக்கு சென்றனர். அங்கு 4-ந் தேதி கம்மனஹள்ளியில் உள்ள ஒரு ஓட்டலில் டீ குடித்து கொண்டு இருந்த அவரை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இதற்கிடையே வி.கே.குருசாமியை கொலை செய்ய முயன்றதாக 5 பேர் மதுரை கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக கீரைத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த 5 பேரை பிடித்து விசாரித்த போது அவர்களுக்கும், பெங்களூரு சம்பவத்திற்கும் எந்த தொடர்பு இல்லை என்று தெரியவந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்பும் வகையில் இவர்கள் சரண் அடைய வந்து இருக்கலாம் என்று தெரியவந்ததால் இவர்களை வேறு வழக்கில் கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

3 பேர் சிக்கினர்

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதும் பிரசாந்த், குரு, கார்த்தி ஆகிய 3 பேரும் கீரைத்துறை போலீசார் முன்பு சரண் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெங்களூரு போலீசார் மதுரை வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

மேலும் அந்த வழக்கில் தொடர்புடைய விஜய் கடந்த சில தினங்களுக்கு காரில் மதுரை வந்த போது அவரை வேறு ஒரு வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவருக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு குறித்து மதுரை போலீசாருக்கு அப்போது எதுவும் தெரியாமல் இருந்தது. இப்போது தெரிய வந்து இருப்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்