< Back
மாநில செய்திகள்
பல்வேறு இடங்களில் தொடர் மழை  ஏரி, தடுப்பணைகள், குளம்-குட்டைகள் நிரம்பியது
ஈரோடு
மாநில செய்திகள்

பல்வேறு இடங்களில் தொடர் மழை ஏரி, தடுப்பணைகள், குளம்-குட்டைகள் நிரம்பியது

தினத்தந்தி
|
13 Oct 2022 1:00 AM IST

குளம்-குட்டைகள் நிரம்பியது

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர் மழை காரணமாக ஏரி, தடுப்பணைகள், குளம், குட்டைகள் நிரம்பியது.

பலத்த மழை

தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வருவதும், மாலை நேரத்தில் அவ்வப்போது மழை பெய்வதுமாக இருந்து வருகிறது. அதேபோல் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் மழை தூற தொடங்கியது. பலத்த மழையாக விடிய, விடிய கொட்டித்தீர்த்தது.

இதேபோல் தாளவாடி, தொட்டகாஞ்சனூர், அருள்வாடி, திகினாரை, ஆசனூர், சூசைபுரம், தலமலை, பனக்கள்ளி ஆகிய சுற்றுவட்டார கிராமங்களிலும் விடிய விடிய மழை பெய்தது. அதன்பின்னர் மழை தூறிக்கொண்டே இருந்தது.

காட்டாற்று வெள்ளம்

பலத்த மழையால் பாக்கு தோட்டம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் தலமலை வனப்பகுதியில் பெய்த மழையால் தாளவாடி மற்றும் பண்ணாரி நகர் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தொடர் மழையால் 30-க் கும் மேற்பட்ட தடுப்பணைகள் மற்றும் குளம், குட்டைகள் நிரம்பியது. மேலும் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாபேட்டை

இதேபோல் அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10-ந் தேதி இரவு பெய்ய தொடங்கிய மழை நேற்று முன்தினம் காலை வரை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

மேலும் அம்மாபேட்டையில் உள்ள மேட்டூர்-பவானி மெயின் ரோட்டில் ரோடு அகலப்படுத்தும் பணி நடந்து வருவதால் அப்பகுதியில் தோண்டப்பட்ட குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ரோடு ஓரங்களிலும், பள்ளத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வேம்பத்தி ஏரி நிரம்பியது

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருவதால் அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேம்பத்தி ஏரி அதன் முழு கொள்ளளவான 13 அடியை எட்டியது. அதிலிருந்து உபரி நீர் வெளியேறி ஆப்பக்கூடல் ஏரிக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் ஏரி நிரம்பியயுடன் 3 ஆடுகளை பலிகொடுத்து பூஜைகள் செய்தனர். பின்னர் ஏரியில் பூக்கள் தூவியும் உபரி நீரை வரவேற்றனர்.

அதேபோல அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் ஏரியும் அதன் முழு கொள்ளளவான 11.25 அடியை எட்டி அதன் உபரி நீர் வெளியேறிக்கொண்டு உள்ளன.

மேலும் செய்திகள்