நாகப்பட்டினம்
புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு
|போலகம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நாகை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 நிதியின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கினார். நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங், வட்டார வேளாண் ஆலோசனை குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் அஜிதா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், உதவி பொறியாளர் பாலச்சந்திரன், ஆதிதிராவிடர் விடுதி தேர்வு நிலை குழு உறுப்பினர் சக்திவேல் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி வரவேற்றார். முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் லதா அன்பழகன் நன்றி கூறினார்.