< Back
மாநில செய்திகள்
மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் தானியங்கி ரெயில் கழுவும் ஆலை திறப்பு
சென்னை
மாநில செய்திகள்

மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் தானியங்கி ரெயில் கழுவும் ஆலை திறப்பு

தினத்தந்தி
|
1 April 2023 12:46 PM IST

மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் தானியங்கி ரெயில் கழுவும் ஆலை திறக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில், மெட்ரோ ரெயில்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்வதற்கான தானியங்கி ரெயில் கழுவும் ஆலை மற்றும் மெட்ரோ ரெயில் பராமரிப்புக்கான 'மொபைல் லிப்டிங் ஜாக்கை' சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், கூடுதல் பொது மேலாளர் எஸ். சதீஷ்பிரபு மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சென்னை மெட்ரோ ரெயில்களின் தினசரி செயல்பாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் மெட்ரோ ரெயில்களின் வெளிப்புறத்தை விரைவாக சுத்தம் செய்வதற்கான இந்த தானியங்கி ரெயில் கழுவும் ஆலை விம்கோ நகர் பணிமனை மெட்ரோவில் உள்ள உயர்மட்ட பிரிவில் அமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி ரெயில் கழுவும் ஆலையின் துப்புரவு அமைப்பு மெட்ரோ ரெயில்களை சுத்தம் செய்ய சோப்பு கரைசல், உயர் அழுத்த நீர் ஜெட் மற்றும் சுழலும் தூரிகைகளைப் பயன்படுத்துகிறது.

இது பல நிலைகளில் மெட்ரோ ரெயில் பெட்டிகளின் வெளிப்புறத்தை சுத்தம் செய்கிறது. இந்த வசதி தானியங்கி சென்சார்களுடன் பொருத்தப்பட்டு உள்ளதால் மெட்ரோ ரெயில், தானியங்கி ரெயில் கழுவும் ஆலைக்குள் நுழைந்தவுடன் சுத்தம் செய்ய தொடங்கிவிடும். 4 பெட்டிகளை கொண்ட ஒரு மெட்ரோ ரெயிலை சுத்தம் செய்வதற்கு 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகிறது. அதில் ஆயிரத்து 600 லிட்டர் (80 சதவீதம்) தண்ணீர் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு மெட்ரோ ரெயிலை சுத்தம் செய்வதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகும். மேலும், விம்கோ நகர் பணிமனையில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சுத்தம் செய்யும் செயல்முறையை தொலைவில் இருந்து கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் கேமரா அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

மேலும், விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் நிறுவப்பட்டுள்ள 'மொபைல் லிப்டிங் ஜாக்', ரெயில் பெட்டிகளை அவிழ்க்க வேண்டிய அவசியமின்றி, கூடியிருந்த நிலையில் ரெயில்களை தூக்க முடியும். 'மொபைல் லிப்டிங் ஜாக்' முக்கியமாக மெட்ரோ ரெயில் பெட்டிகளை அகற்றுவதற்கும், ரெயில் பெட்டிகளின் அடியில் உபகரணங்களை அகற்றுவதற்கும் மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

விம்கோ நகர் மெட்ரோ பணிமனையில் இந்த 'மொபைல் லிப்டிங் ஜாக்' நிறுவப்பட்டதன் மூலம், பணிமனை இப்போது முழுமையாக மெட்ரோ ரெயிலை பெரிய அளவில் மாற்றியமைக்க மற்றும் பராமரிக்க ஏதுவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்