திருவாரூர்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்
|திருவாரூரில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் தேவையற்ற வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்த தேவையற்ற பணியினால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கூட்டுறவு சங்கங்கள் மேலும் பாதிக்கப்படும் சுழ்நிலை ஏற்படும். எனவே தேவையற்ற உபகரணங்களை வாங்கும் முடிவினை முற்றிலும் ரத்து செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 25-ந் தேதி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று திருவாரூரில் கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் கேசவன், மாவட்ட துணை செயலாளர் பாலகிருஷ்ணன், போராட்டக்குழு தலைவர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் அனைத்து பணியாளர்களும் தொடர் விடுப்பில் செல்வது என முடிவெடுத்தனர்.