தேனி
வைகை அணை நீர்த்தேக்கத்தில் 2-வது கட்டமாக வளர்ப்புக்காக விடப்பட்ட 3 லட்சம் மீன்குஞ்சுகள்
|வைகை அணை நீர்த்தேக்கத்தில் 2-வது கட்டமாக வளர்ப்புக்காக 3 லட்சம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத்துறை சார்பில் நடைபெறும் இந்த தொழிலில் 140-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு நாளைக்கு 500 முதல் 700 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்பட்டு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இயற்கையான முறையில் வளரும் வைகை அணை மீன்களுக்கு பொதுமக்களிடையே அதிகளவில் வரவேற்பு இருக்கும். இதனால் வைகை அணை மீன்வளத்துறை அலுவலகத்தில் பிரமாண்ட தொட்டிகளில் மீன்குஞ்சுகள் 50 நாட்கள் வரை வளர்க்கப்பட்டு வைகை அணை நீர்த்தேக்கத்தில் விடப்படும்.
இங்கு ரோகு, கட்லா, மிருகால் போன்ற மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வைகை அணையில் புதிதாக 16 லட்சம் மீன்குஞ்சுகள் விட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, முதற்கட்டமாக 3 லட்சம் மீன்குஞ்சுகள் நீர்த்தேக்கத்தில் விடப்பட்டது. இந்நிலையில் 2-வது கட்டமாக அணையில் மேலும் 3 லட்சம் நுண் மீன்குஞ்சுகள் விடும் பணி நடந்தது. அதில். 1 லட்சம் கட்லா மீன்குஞ்சுகளும், 2 லட்சம் ரோகு மீன்குஞ்சுகளும் விடப்பட்டது.
மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளதால் மீனவர்கள் சிறிய துளையுடைய வலைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன் வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா, மீன்வள ஆய்வாளர் அண்ணாதுரை, உதவி ஆய்வாளர் கலையரசி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.