கடலூர்
விருத்தாசலம் பகுதியில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகளை மாற்றும் பணி தீவிரம்
|ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக விருத்தாசலம் பகுதியில் ரெயில் தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விருத்தாசலம்
இருவழிப்பாதை
சென்னை-கன்னியாகுமரி இடையே உள்ள ரெயில்பாதையை இருவழிப்பாதையாக மாற்றும் பணிகள் இறுதி கட்ட நிலையை நெருங்கி வருகிறது. ரெயில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக இருந்த காலத்தில் எதிரே வரும் ரெயிலுக்கு வழிவிடுவதற்காக ரெயில்கள் ஆங்காங்கே நின்று செல்லும். இதனால் காலதாமதம், கூடுதல் நேரம் போன்ற பிரச்சினைகள் இருந்தது.
ஆனால் தற்போது இருவழிப்பாதையாக மாற்றப்பட்ட பின்னர் பெரும்பாலான ரெயில்கள் தாமதமின்றி செல்ல வேண்டிய இடத்துக்கு குறித்த நேரத்தில் சென்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேகத்தை அதிகரிக்க
இந்த நிலையில் இருவழிப்பாதையில் அடுத்த கட்ட முன்னேற்றமாக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பணியில் ரெயில்வே துறை களம் இறங்கி உள்ளது. இதற்காக தற்போது விருத்தாசலம் ரெயில் நிலையம் அருகே நவீன எந்திரங்களை கொண்டு ரெயில்வே ஊழியர்கள் பழைய தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகளை அகற்றிவிட்டு புதிய தண்டவாளங்கள், சிலீப்பர் கட்டைகளை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
முன்பு ரெயில்கள் மணிக்கு 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. இதற்காக 52 கேஜ் தண்டவாளங்கள் போடப்பட்டிருந்தன. ஆனால் வந்தே பாரத் போன்ற ரெயில்களின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படுவதால் இந்த பாதையில் 60 கேஜ் அளவிலான தண்டவாளங்கள் அமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
பயண நேரம் குறைய வாய்ப்பு
தற்போது விழுப்புரத்தில் இருந்து தாழநல்லூர் வரை இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்ததும் ரெயில்கள் அதிவேகத்தில் இயக்கப்படும். இதன் மூலம் பயண நேரம் குறைய வாய்ப்பு உள்ளது. பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் ரெயில்களை விரைவாக இயக்குவதற்காக பணிகள் துரிதமாக நடைபெற்ற வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.