திண்டுக்கல்
போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் கண்காணிப்பு கேமரா
|தேனி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கண்காணிப்பு கேமரா
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகளின் வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவுப்படி முதற்கட்டமாக 29 போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் ஜீப்களின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கான நோக்கம் குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
போலீஸ் அதிகாரிகள் தினமும் பாதுகாப்பு பணி மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் வாகன தணிக்கையின் போது சிலர் பிரச்சினை செய்வது உண்டு. பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது அங்கு நடக்கும் நிகழ்வுகளை பதிவு வேண்டிய அவசியம் கருதியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீஸ் வாகனங்கள் எங்கு எல்லாம் செல்கிறது என்பது பதிவாகும்.
60 வாகனங்கள்
ரோந்து செல்லும் அதிகாரிகள் முழுமையாக ரோந்து பணி மேற்கொள்கிறார்களா? என்றும் தெரிந்து விடும். குற்றச்சாட்டுகளுக்கு இடம் கொடுக்காத வகையில் போலீசார் பணியாற்ற முடியும். ஒருவேளை ஏதேனும் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அதற்கான ஆதாரங்களை இந்த கேமராக்களின் மூலம் பெற முடியும்.
மாவட்டத்தில் மொத்தம் 60 வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டன. முதற்கட்டமாக 29 வாகனங்களில் பொருத்தப்பட்டன. மற்ற வாகனங்களில் ஓரிரு நாட்களில் பொருத்தப்படும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் அதிகாரிகளின் செல்போனில் பார்த்துக் கொள்ளலாம். அதை சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.