< Back
மாநில செய்திகள்
வேதாரண்யத்தில், நாட்டு மீன்கள் விற்பனை அமோகம்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

வேதாரண்யத்தில், நாட்டு மீன்கள் விற்பனை அமோகம்

தினத்தந்தி
|
13 May 2023 12:15 AM IST

மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுவதால் வேதாரண்யத்தில் நாட்டு மீன்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேதாரண்யம்:

மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுவதால் வேதாரண்யத்தில் நாட்டு மீன்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மீன்பிடி தடைக்காலம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராம பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. நாள்தோறும் இப்பகுதியில் இருந்து சுமார் 5 முதல் 10 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் விசைப்படகுகள் தடைகாலம் அறிவித்த நிலையில் ஆறுகாட்டுத்துறையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல், அங்கு கட்டப்பட்டு வரும் துண்டி முள்வளைவு பகுதியில் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் கடலில் குறைந்த தூரம் சென்று பைபர் படகில் நாள்தோறும் மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர்.

வளர்ப்பு மீன்களுக்கு கடும் கிராக்கி

இந்தநிலையில் மோக்கா புயல் வங்க கடலில் உருவாகி இருப்பதால் கடந்த 7 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் கடலில் மீன்கள் பிடிக்க முடியாத சூழ்நிலையில் தற்போது வேதாரண்யம் அருகே அவரிக்காடு, கரியாப்பட்டினம், தென்னம்புலம், கள்ளிமேடு, கோடியக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், நீரோடைகளில் கிடைக்கும் நாட்டு மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

வேதாரண்யம் பகுதியில் உள்ள உப்பனாறு, அடப்பாறு, மாணங்கொண்டான் ஆறு உள்ளிட்ட ஆற்று பகுதிகளிலும் சிறுசிறு வலைகளை வைத்து மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இவர்களது வலைகளில் மடவாய், சிலேபி, கெளுத்தி, குறவை மீன், விரால் கெண்டை என பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கின்றன. ஆற்றுப்பகுதிகளில் அதிகாலையில் கையால் தடவி இறால் மீன்களையும் பிடிக்கின்றனர்.

உள்ளூர் மீனவர்கள் மகிழ்ச்சி

கடல் மீன்கள் கிடைக்காத நிலையில் மீன் பிரியர்கள் இப்பகுதியில் கிடைக்கும் நாட்டு மீன்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஆற்றில் பிடிக்கப்படும் இறால் கிலோ ரூ.300-க்கும், மடவா மீன் ரூ.200-க்கும், சிலேபி மற்றும் உளுவை ரூ.100-க்கும், கெண்டை மீன் ரூ.150-க்கும் விலை போகிறது. காலையில் பிடிக்கப்படும் மீன்கள் உடனுக்குடன் அப்போதே உயிருடன் விற்பனையாவதால் உள்ளூர் மீனவர்கள் மற்றும் சில்லரை மீன் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஐஸ் வைக்காமலும் மீன் கெடாமல் இருப்பதற்கு எந்த வித ரசாயன பொருட்களும் தெளிக்காமல் அவ்வப்போது உயிருடன் மீன்கள் கிடைப்பதால் மீன் பிரியர்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். மேலும் உள்நாட்டு மீனவர்கள் ஆறு, குளம், குட்டைகள் மற்றும் நீர்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்