நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில், பூச்சி தாக்கிய மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு
|தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேதாரண்யத்தில் பூச்சி தாக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்தனர்.
வேதாரண்யம்:
தினத்தந்தி செய்தி எதிரொலியாக வேதாரண்யத்தில் பூச்சி தாக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்தனர்.
மா சாகுபடி
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை, தேத்தாக்குடி, கத்தரிப்புலம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, தலைஞாயிறு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செந்தூரா , பங்கனபள்ளி, ருமெனியா, ஒட்டு, நீளம் என 10-க்கும் மேற்பட்ட வகையான மா வகைகள் 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் டன் மாங்காய்களை மாம்பழத்திற்காக தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது மா காய்த்து நல்ல லாபம் கிடைக்கும் என மா விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது மாபூக்கள் அவ்வப்போது பெய்த மழை மற்றும் பூச்சி தாக்குதால் அதிக அளவில் பாதிக்கபட்டு பூக்கள் கருகியதால் மாங்காய் மிக குறைந்த அளவே காய்த்துள்ளது.
பூச்சி தாக்குதல்
மேலும் தற்போது மா இலை மற்றும் மாங்காய்களில் புதிதாக கருப்பு பூச்சி தாக்கி உள்ளது. எனவே வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வேளாண்மை துறை அதிகாரிகள் தாமதம் இன்றி உடனடியாக கிராமபுரங்களில் உள்ள மா மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து எந்த வகையான பூச்சி தாக்குதல், அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தி நாளிதழில் நேற்று வெளியானது. அதன் எதிரொலியாக செம்போடை, தேத்தாக்குடி, தெற்கு கத்தரிப்புலம் உள்ளிட்ட கிராமங்களில் நாகை தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதி மாணிக்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஞானசேகரன், கார்த்திகேயன், சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்கு அனுப்பி வைப்பு
மேலும் பாதித்த மாங்காய்களையும் மற்றும் இலைகளையும் சிக்கல் வேளாண்மை அறிவியல் மையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நாகை தோட்டக்கலை உதவி இயக்குனர் நீதிமாணிக்கம் கூறுகையில், வேதாரண்யம் பகுதியில் மாமரங்களில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த பூச்சி தாக்குதல் குறித்து சிக்கல் வேளாண்மை துறைக்கு மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம்.
ஆய்வு முடிவு வந்தவுடன் இதற்கான தீர்வு குறித்து விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும் என்றார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மா விவசாயிகள் உடனடி ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.