நாகப்பட்டினம்
வேதாரண்யத்தில், முழுவீச்சில் உப்பு உற்பத்தி
|பருவம் தவறிய மழைக்கு பிறகு வெயில் சுட்டெரிப்பதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
வேதாரண்யம்:
பருவம் தவறிய மழைக்கு பிறகு வெயில் சுட்டெரிப்பதால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உப்பு உற்பத்தியில் 2-ம் இடம்
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இது தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
உப்பு உற்பத்தி தொழிலில் பத்தாயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மழைக்காலம் முடிந்து ஜனவரி மாதத்தில் தொடங்கப்படும் உப்பு உற்பத்தி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். இந்த ஒன்பது மாத காலத்தில் சுமார் 6 ஆயிரம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும்.
ரெயில்கள் மூலம் ஏற்றுமதி
வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பு வெளி மாவட்டங்களுக்கும் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்கள் மற்றும் லாரிகள் மூலமாகதான் உப்பு ஏற்றுமதி நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு அகல ரெயில் பாதை திட்டத்தினால் ரெயில் நிறுத்தப்பட்டது.
அதையடுத்து உப்பு ஏற்றுமதி முழுவதும் லாரியிலேயே நடைபெற்றது. தற்போது அகல ரெயில் பாதை திட்டம் நிறைவடைந்து அதில் ரெயில் சேவை தொடங்கியுள்ளது. ஆனால் உப்பு ஏற்றுமதி நடைபெற இன்னும் ஒரு சில மாதங்கள் ஆகும் என தெரிகிறது. ரெயில் மூலம் உப்பு ஏற்றுமதி செய்தால் நல்ல விலை கிடைக்கும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
பருவம் தவறிய மழை
இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி தொடங்கப்பட்ட நிலையில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி தடைபட்டது. குறிப்பாக கடந்த 25 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் உப்பு உற்பத்தி அடியோடு பாதித்தது.
மேலும் இந்த ஆண்டு கோடை மழையால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது 25 நாட்களுக்கு பிறகு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இலக்கை எட்ட..
இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் 9 ஆயிரம் ஏக்கரில் முழுவீச்சில் உற்பத்தியை தொடங்கி உள்ளனர். அதைதொடர்ந்து இரவு, பகலாக உப்பு உற்பத்தியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆண்டுதோறும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் உப்பு உற்பத்தி ஆண்டு தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்டதையடுத்து, இந்த ஆண்டு இலக்கை எட்ட உப்பள பகுதிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.