தேனி
வடபுதுப்பட்டியில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்
|தேனி அருகே வடபுதுப்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சியில் மதுராபுரி-அன்னஞ்சி சாலை, மதுராபுரி-சொக்கத்தேவன்பட்டி சாலை ஆகிய சாலையின் ஓரம் ஆக்கிரமிப்பு அதிகரித்தது. இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 32 கடைகள், 23 வீடுகளின் உரிமையாளர்கள் என மொத்தம் 55 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
நோட்டீஸ் பெற்ற சிலர் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டனர். மற்ற ஆக்கிரமிப்புகள் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. ஊராட்சி மன்ற தலைவர் அன்னப்பிரகாஷ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.