< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்:கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்:கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் நடந்த மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கோ.லட்சுமிபதி நேற்று காலையில் தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

விழிப்புணர்வு

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி முன்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மேலும், மழைநீர் சேகரிப்பு தொடர்பான குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தையும் தொடங்கி வைத்து, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டு, மாணவ, மாணவிகளிடம் வழங்கினார்.

இந்த ஊர்வலம் வ.உ.சி. கல்லூரி முன்பு இருந்து தொடங்கி பாளையங்கோட்டை ரோடு வழியாக ராஜாஜி பூங்கா முன்பு முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்ற மாணவ, மாணவிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

நிலத்தடி நீர் மட்டம்

இது குறித்து மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி கூறும் போது, மழைநீர் சேகரிப்பு என்பது எதிர்கால பயன்பாட்டுக்காக மழைநீரை சேகரிப்பது ஆகும். மழைநீர் சேகரிப்பு திட்டம் நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், மழை வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. அரசு அலுவலக கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் கட்டிடங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை முழுமையாக சேகரித்து மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

இதில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் ஜான்செல்வம், இளநிலை நீர் பகுப்பாய்வாளர் வினோத்குமார், புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மரியஜோசப் அந்தோணி, அரசுஅலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்