< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில்தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
25 Oct 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தூத்துக்குடி டூவிபுரம் 5-வது தெருவில் உள்ள சங்கரநாராயணன் பூங்கா முன்பு நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஜான்சன் மெல்கிசதேக் ஸ்டாலின் (தூத்துக்குடி), கனகராஜ் (தென்காசி), காந்திராஜா (நெல்லை) ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் ஜெயசீலன் (தூத்துக்குடி), ஆறுமுகச்சாமி (தென்காசி), ராஜகுமார் (நெல்லை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தீர்ப்பு குழு செயலர் செந்தில் வரவேற்று பேசினார்.

கோரிக்கை

போராட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள், சி.எஸ்.ஐ, ஆர்.சி நிறுவனங்களின் பள்ளிகளில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்காததால் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஊதியமின்றி தவித்து வருகின்றனர். அவ்வாறு பணியாற்றி வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

போராட்டத்தில் மாநில செயலாளர் ராஜேந்திரன், தமிழக பள்ளி கல்வி ஆசிரியர் கூட்டணி நிறுவனர் காசி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராபர்ட் கிங், லிவிங்ஸ்டன், எட்வின், செயற்குழு உறுப்பினர் நவநீதன், மாவட்ட பொருளாளர் ஹெர்பான்சிங் பிரேம்குமார், மகளிரணி செயலாளர் நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் இரவு வரை போராட்டத்தை தொடர்ந்ததால், தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆசிரியர்களின் கோரிக்கையை மாவட்ட கலெக்டர் மூலம் அரசுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்