< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
தூத்துக்குடி
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
4 July 2023 12:15 AM IST

தூத்துக்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

போராட்டம்

தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி மாணவர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுடன் கல்லூரி தரப்பினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் தலைமையில் மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள், கல்லூரி முதல்வர் கலந்து கொண்டனர்.

ஒத்திவைப்பு

இந்த பேச்சுவார்த்தையில் சுயநிதிபாடப்பிரிவியில் கடந்தான்டு கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் மட்டும் உயரத்துவது, வரும் கல்வியாண்டில் இருந்து முதலாம் ஆண்டு சேர்க்கையின்போது என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதையே மூன்றாண்டுகளும் தொடர்வது என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திரும்ப பெறுவது, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு கட்டணத்தை நிர்ணயம் செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்குவது, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த ஒரு பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்