தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்
|தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
கையெழுத்து இயக்கம்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி, கையெழுத்திட்ட போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மாரத்தான் போட்டி, கையெழுத்து முகாம், விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். வியாபார ரீதியாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டம் அல்லாமலேயே ஒரு வருடம் ஜாமீன் வழங்காமல் சிறையிலடைக்க சட்டத்தில் வழிவகை உண்டு. அவ்வாறு ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.
தகவல் தெரிவிக்க..
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக 66 வழக்குகள் பதிவு செய்து 123 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து சுமார் 142 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருளை முற்றிலும் ஒழிப்பதற்காக பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதற்காக ஏற்கனவே மாவட்ட போலீஸ்துறை செல் போன் 83000 14567 என்ற எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறினார். நிகழ்ச்சியில் போலீசார் திரளாக கலந்து கொண்டனர்.