தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 115 போலீசாருக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல்
|தூத்துக்குடி மாவட்டத்தில் 115 போலீசாருக்கு கலந்தாய்வு மூலம் பொது இடமாறுதல் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 2-ம் நிலை காவலர் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசாருக்கு நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து பொது இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், கோடிலிங்கம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சத்தியராஜ், சுரேஷ், மாவட்ட போலீஸ் அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
115 பேர்
தொடர்ந்து கலந்தாய்வில் பங்கேற்ற போலீசாரிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேரில் விசாரித்தார். போலீசாரின் விருப்பங்களை கேட்டறிந்து, போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் தற்போது மாறுதலாகி செல்லும் காலிப்பணியிடங்களையும் கணக்கிட்டு அவர்களின் விருப்பத்திற்கேற்ப 115 பேருக்கு பணி மாறுதல் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசார் சிறப்பாக பணியாற்ற அறிவுரையும் வழங்கினார்.