திருச்சி
திருச்சியில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத்தினரால் பரபரப்பு
|திருச்சியில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
திருச்சியில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் சாதாரண டிக்கெட் எடுத்து முன்பதிவு பெட்டியில் ஏறிய வடமாநிலத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில்
கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு சனிக்கிழமை தோறும் காலை 5.51 மணிக்கு வாராந்திர ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோல் சனிக்கிழமையான நேற்று காலை வழக்கம் போல் ஹவுராவுக்கு கன்னியாகுமரியில் இருந்து ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் வழக்கமான நேரத்தை விட 15 நிமிடங்கள் முன்கூட்டியே திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் முன்பதிவு டிக்கெட் இன்றி, சாதாரண டிக்கெட் வைத்து இருந்த வடமாநிலத்தினர் முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறினர்.
வடமாநிலத்தினர்
இதைப்பார்த்த முன்பதிவு செய்த பயணிகள் அவர்களை இறங்கும்படி கூறினர். அவர்கள் இறங்க மறுக்கவே, முன்பதிவு செய்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். அத்துடன் இதுபற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள், முன்பதிவு டிக்கெட் இல்லாத வடமாநிலத்தினரை கீழே இறக்கி விட்டனர். அத்துடன் சிலருக்கு அபராதம் விதித்தனர். பின்னர், முன்பதிவில்லா பெட்டியில் ஏற முடியாதவர்களை, அடுத்துவந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
1 மணி நேரம் தாமதம்
இதன்காரணமாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் 55 நிமிடம் தாமதமாக 2.25 மணிக்கு புறப்பட்டு சென்றது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரெயில் நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டதுடன், பயணிகளும் அவதி அடைந்தனர்.