< Back
மாநில செய்திகள்
திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 6,913 பேர் எழுதினர்
திருச்சி
மாநில செய்திகள்

திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 6,913 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
25 Jun 2022 8:08 PM GMT

திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வை 6 ஆயிரத்து 913 பேர் எழுதினர்.

சமயபுரம், ஜூன்.26-

திருச்சி மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கான தேர்வை 6 ஆயிரத்து 913 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு

தமிழக காவல்துறையில் மாநிலம் முழுவதும் 39 மையங்களில் 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 8 ஆயிரத்து 468 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வர்களுக்காக சமயபுரத்தில் உள்ளே கே. ராமகிருஷ்ணா என்ஜினீயரிங் கல்லூரி, இருங்களூரில் உள்ள எஸ்.ஆர்.எம். என்ஜினீயரிங் கல்லூரி, சிறுகனுரில் உள்ள எம்.ஏ.எம் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பலத்த சோதனை

தேர்வு மையத்திற்குள் காலை 8.30 மணியளவில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி தேர்வர்கள் அனைவரும் காலையில் தேர்வு மையத்திற்கு வந்தனர். நுழைவுவாயிலில் அவர்களை பலத்த சோதனை செய்து தேர்வு மையத்திற்குள் போலீசார் அனுப்பினர்.

தேர்வறைக்குள் செல்போன், மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை அனுமதிக்கப்படவில்லை. இதனை கொண்டு வந்தவர்களிடம் நுழைவுவாயிலில் போலீசார் சோதனையின் போது வாங்கி அதனை பாதுகாப்பாக வைத்து டோக்கன் வினியோகித்தனர். தேர்வர்களின் உடைமைகளையும் அதில் வைத்தனர்.

6,913 பேர் எழுதினர்

முதலில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை முதன்மைத் தேர்வு நடைபெற்றது. பின்னர் மாலை 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ்மொழி தேர்வு நடைபெற்றது. முன்னதாக தேர்வு எழுத வந்த விண்ணப்பதாரர்களிடம் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, (ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் இதில் ஏதேனும் ஒன்று) சரிபார்க்கப்பட்டது.

தேர்வு எழுத விண்ணப்பித்த 8 ஆயிரத்து 468 பேரில் 6 ஆயிரத்து 913 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்து இருந்தனர். ஆயிரத்து 555 பேர் தேர்வு எழுதவரவில்லை.

சிறப்பு பஸ்

தேர்வர்களின் வசதிக்காக திருச்சியில் இருந்து தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

தேர்வு மையத்திற்குள் தேர்வு எழுத சென்ற சில தேர்வர்கள் கைக்குழந்தைகளை தங்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து சென்றனர். அவர்கள் தேர்வு மையத்தின் வெளியே குழந்தைகளை வைத்து பராமரித்து வந்தனர். தேர்வு எழுதிவிட்டு வந்ததும் தங்களது குழந்தைகளை தேர்வர்கள் கொஞ்சி மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்