திருவாரூர்
திருவாரூரில், அரிசி விலை உயர்வு
|திருவாரூரில் அரிசி விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
கொரடாச்சேரி:
திருவாரூரில் அரிசி விலை உயர்ந்து கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரித்துள்ளது.
விலை உயர்வு
திருவாரூரில் கடந்த சில தினங்களாக அரிசி விலை உயர்ந்து வருகிறது. ஆர்.என்.ஆர் மைசூர் ரக அரிசி 1300-ல் இருந்து 1500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இட்லி அரிசி கிலோ ரூ.36-ல் இருந்து ரூ.40-க்கு விற்கப்படுகிறது. பாபர்லா மற்றும் பி.பி.டி. பொன்னி ரூ.50-ல் இருந்து ரூ.56-க்கு விற்பனையாகிறது. கோ 51 மற்றும் ஐ.ஆர்-20 ரூ.36-ல் இருந்து ரூ.40 வரை விலை அதிகரித்துள்ளது.
கர்நாடக பொன்னி ஒரு மூட்டை (26 கிலோ) ரூ.1100-லிருந்து ரூ.1350 ஆகவும், பச்சரிசி ரூ.28-லிருந்து ரூ.36-க்கும் விற்பனையாகிறது. பாசுமதி அரிசி ஒரு மூட்டை (10 கிலோ) ரூ.870-ல் இருந்து ரூ.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசி விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ரேஷன் கடைகள் மூலம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலும் மோட்டா ரக நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நெல் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருள் வினியோகத்திற்காக அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏற்றுமதி செய்வதில் போட்டி
வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் வியாபாரிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக தற்போது உயர்ரக நெல் கொள்முதல் விலை அதிகரித்து, அரிசி விலையும் உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பாசுமதி அரிசியை தவிர மற்ற அரிசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதனால் அரிசி விலை ஒரு சில தினங்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விற்பனை மந்தமாக உள்ளது
இதுகுறித்து திருவாரூரை சேர்ந்த அரிசி வியாபாரி ராஜவேல் கூறுகையில், உயர்ரக நெல் விளைச்சல் குறைவாக இருப்பதால் அதன் கொள்முதல் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சில தினங்களாக அரிசி விலை அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் அரிசி விற்பனை சற்று மந்தமாக உள்ளது.
பாசுமதி அரிசி, கர்நாடக பொன்னி உள்ளிட்ட வெளிமாநில அரிசிகளின் விலை வேகமாக அதிகரித்து வருகின்ற அதே நேரத்தில், தமிழகத்தில் விலையும் உயர்ரக அரிசியின் விலை ஏற்றம் சற்று குறைவாக உள்ளது ஆறுதல் அளிக்கிறது.