< Back
மாநில செய்திகள்
திருவாரூர் மாவட்டத்தில், பருத்தி பறிக்கும் பணி தீவிரம்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில், பருத்தி பறிக்கும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
11 Jun 2023 12:15 AM IST

திருவாரூர் மாவட்டத்தில், பருத்தி பறிக்கும் பணி தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் பருத்தி கொள்முதல் செய்யும் பணிகள் தொடங்கி விட்டதால் விவசாயிகள் பருத்தி பறிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருத்தி சாகுபடி

திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

இந்த சாகுபடி தொடங்கிய சில நாட்களிலேயே மழை பெய்து அவற்றை வீணாக்கியது. தொடர்ந்து வெயில் அடித்ததால் பாதிப்புகள் குறைந்து பருத்தி செடிகள் நன்றாக வளர்ந்து வந்தது. கடந்த மாதம் இறுதியில் பெய்த மழையால் பூக்கள் மற்றும் சப்பைகள் உதிர்ந்ததாக விவசாயிகள் வேதனையில் இருந்தனர். தற்போது பருத்தி அறுவடைக்கு தயாராகிவிட்டது. தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பருத்தி அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.

பஞ்சுகளை பறிக்கும் பணி

பருத்தி அறுவடை செய்யும் சீசன் நடந்து வருவதால் செடிகளில் காய்த்துள்ள பருத்தி காய்களில் உள்ள பஞ்சுகளை பறிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு பறிக்கப்பட்ட பருத்தியில் இருந்து பஞ்சுகளை தனியாக பிரித்தெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. பருத்தியை பொருத்தவரை கடந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

தொடர்ந்து அதிகரித்து ரூ.80 வரை பருத்தி விற்பனையானது. இந்தாண்டு அறுவடை செய்யப்பட்ட பருத்திகளை கொள்முதல் செய்து விவசாயிகள் அதிகம் லாபம் பெறுவதற்கு ஏதுவாக திருவாரூர் மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் பருத்தி கொள்முதலுக்கான பணிகள் நடந்து வருகிறது.

கொள்முதல்

திருவாரூரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி கொள்முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல்லை மட்டுமே சாகுபடி செய்வார்கள். ஆனால் இந்தாண்டு அதிகமாக பருத்தி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராகி விட்டோம்.

தற்போது ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளதால், பருத்தி பறிக்க போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் சில விவசாயிகள் தங்கள் வயலில் பருத்தியை பறித்து, பிரித்து கொள்முதலுக்கு கொண்டு செல்கின்றனர். ஏக்கருக்கு பல ஆயிரம் வரை செலவு செய்து விட்டோம். அதனால் பருத்தி சாகுபடியில் உரிய மகசூல் கிடைப்பதுடன் லாபம் கிடைத்தால் அடுத்த முறை சாகுபடி செய்ய ஊக்கமாக இருக்கும் என்றனர்.

மேலும் செய்திகள்