திருவள்ளூர்
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
|திருவள்ளூரில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 97 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 46 மனுக்களும், வேலைவாய்ப்பு வேண்டி 37 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 43 மனுக்களும், இதர துறைகள் சார்பாக 93 மனுக்களும் என மொத்தம் 316 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு நல வாரிய திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையாக 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரமும், இயற்கை மரணத்திற்கான ஈமச்சடங்கு நிதியாக 11 பயனாளிகளுக்கு ரூ.1.87 லட்சமும் என மொத்தம் 26 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பாக 2020-ம் கொடிநாள் ஆண்டில் அதிக அளவில் கொடிநாள் நிதி வசூல் செய்த பல்வேறு துறைகளை சார்ந்த 12 அலுவலர்களுக்கு தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெள்ளி பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் கடந்த 2019-ம் ஆண்டு அண்ணனூர் சத்துணவு மைய சமையலராக பணிபுரிந்த நாகேஷ்வரி என்பவர் பணியிடையில் காலமானதை தொடர்ந்து அவரின் வாரிசுதாரருக்கு சத்துணவு சமையலராக பணி நியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.
மேலும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் 400 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை இலவசமாகவும், அரசு பள்ளிகளில் படித்து தற்போது உயர்கல்வி பயின்று வரும் 20 மாணவ மாணவியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஹஸ்ரத் பேகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.