திருவள்ளூர்
திருவள்ளூர் நகராட்சி 17-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதி
|திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டில் உள்ள ஹரே ராம் நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. சமீபத்தில் பெய்த மழையால் இப்பகுதியில் சாலையில் மழைநீர் தேங்கி பல நாட்களாக குளம்போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் குழந்தைகள் பள்ளி மாணவர்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தேங்கியுள்ள மழைநீரில் இறங்கி நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில், பெரும்பாலான இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து கடந்த ஒரு மாத காலமாக வீடுகளுக்கு முன்பு தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு குழந்தைகள், பெண்கள், வயதானவர்களுக்கு டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளை சுற்றி குளம்போல் தேங்கி கடும் சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மழை பெய்யும் போது கழிவுநீருடன் மழைநீரும் கலந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.