< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி - போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தினத்தந்தி
|
31 Aug 2022 2:51 PM IST

இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 951 இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூரில் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு விநாயகர் சிலைகளை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி, திருவள்ளூரில் 173, திருத்தணியில் 284, ஊத்துக்கோட்டையில் 210, பொன்னேரியில் 68, கும்மிடிப்பூண்டியில் 216 ஆகிய 5 உட்கோட்டங்களில் மொத்தம் 951 சிலைகள் வைக்க அனுமதி வழங்கி உள்ளனர்.

சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும், பூஜை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் போன்றவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் போன்றவற்றை போலீசார் பெற்று வருகின்றனர், பிரச்சினைகள் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பூஜை முடிந்த பின்னர் இந்த சிலைகள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட 17 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்