திருப்பூரில் சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு..!
|திருப்பூரில் பேருந்துக்காக காத்திருந்த போது சமுதாய நலக்கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலை கொழுமம் பழனி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. இப்பகுதி பஸ் நிறுத்தமாகவும் இருக்கிறது. இதனால் காலை முதல் இரவு வரை அப்பகுதி பொதுமக்கள், சமுதாய நலக்கூடம் முன்பு பஸ்சுக்காக காத்து நின்று உடுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள்.
இன்று காலை கொழுமம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மணிகண்டன் (வயது 28), கவுதம் (29), முரளிராஜன் (35) ஆகியோர் வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்காக சமுதாய நலக்கூடம் முன்பு காத்து நின்றனர். இந்நிலையில் உடுமலை பகுதியில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சமுதாய நலக்கூடத்தின் முன்புற ஸ்லாப் திடீரென இடிந்து, அதன் கீழ் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில் மணிகண்டன், கவுதம், முரளிராஜன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினர்.
இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனே 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. உடனே இது குறித்து குமரலிங்கம் போலீஸ் மற்றும் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 3பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றி அடியில் சிக்கியிருந்த 3பேரையும் மீட்டனர். ஆனால் 3பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 3பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வேலைக்கு செல்வதற்காக பஸ்சுக்கு காத்து நின்ற 3 தொழிலாளர்கள் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான சம்பவம் உடுமலை பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமுதாய நலக்கூடம் ஏற்கனவே சிதலமடைந்திருந்த நிலையில் அதனை இடித்து புதிய கட்டிடம் கட்டப்பட இருந்தது. இந்நிலையில் மேற்கூரை இடிந்து விழுந்து 3பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து அந்த கட்டிடம் முற்றிலும் அகற்றப்பட உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.