< Back
மாநில செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதி
மதுரை
மாநில செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதி

தினத்தந்தி
|
17 Jun 2023 1:30 AM IST

திருப்பரங்குன்றம் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் வசதியின்றி மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அரசு தொடக்கப்பள்ளி

திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 பேர் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் காலை உணவு மற்றும் மதியவேளையில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இங்கு குடிதண்ணீர் வசதி இல்லை. வாரம் ஒருமுறை மாநகராட்சி லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கும், பாத்திரங்களை கழுவுவதற்கும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த தண்ணீர் போதிய அளவில் இல்லாததால் தனியார் லாரி மூலம் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. இதேபோலதான் தினமும் ஒருகுடம் ரூ.10-க்கு குடிதண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சிலசமயங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறையால் சமையலர் வெளியே கடைவீதிக்குசென்று தலை சுமையாக சுமார் 1 கி.மீ.தூரம் தண்ணீர் கொண்டுவரக்கூடிய நிலை இருந்து வருகிறது.

குடிநீர் பிரச்சினை

இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு ஆரம்பகட்ட பணிகள் வேகமாக நடந்தது. ஆனால் பாதியிலே அது நிறுத்தப்பட்டது. தற்போது பள்ளி அருகே பழுதான ஆழ்துளை கிணற்றை சரிசெய்வதாக கூறி குழாய்களை கழற்றினார்கள்.

ஆனால் கடந்த 9 மாதத்திற்கு மேலாகியும் குழாயை சரிசெய்யவில்லை. கழற்றப்பட்ட பைப்புகள் ஒருபுறமும், பழுதான ஆழ்துளை கிணறு திறந்தவெளியிலுமாக பாராமுகமாக இருந்து வருகிறது. இதனால் மாணவர்களும், பொதுமக்களும் குடிதண்ணீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பயன்பாடு இன்றி பல ஆண்டுகளாக மாநகராட்சி கழிப்பறை பூட்டியே கிடக்கிறது.

அடிப்படை வசதிகள்

பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருகிறது. அதேபோல இந்த தொடக்கப்பள்ளியில் 35 பேர்மட்டுமே படித்து வருகின்றனர். பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 4-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையும், 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருவகுப்பறையும் என 2 அறைகள் மட்டுமே உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் தலைமை ஆசிரியை, ஒரு ஆசிரியை என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர்.

இப்பள்ளியில் அடிப்படை வசதி இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்