< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

தினத்தந்தி
|
27 Jun 2023 12:15 AM IST

திருச்செந்தூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபதாரம் விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் ஆணையாளர் வேலவன் ஆகியோர் கூட்டாக வெயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்

தமிழக அரசு உத்தரவின் படி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் 2019 ஜனவரி 1 முதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சேமித்து வைத்தல் போன்ற செயல்களை பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

குற்றவியல் நடவடிக்கை

இதைமீறி பயன்படுத்துபவர்கள் மீது பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை சட்டம் 2016 மற்றும் திடக்கழிவு மேலாண்மை சட்டம் 2016-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.500 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள நச்சு கழிவுகள் மற்றும் இதர கழிவு நீர்களை திறந்த வெளி கால்வாயிலோ அல்லது மழைநீர் கால்வாயிலோ விடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும் கழிவு நீரினை தங்கள் தெருவில் உள்ள பாதாளசாக்கடை அமைப்பில் நகராட்சி அனுமதியோடு இணைத்து அப்புறப்படுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது நகராட்சி சட்ட விதிகளின்படி குடிநீர் இணைப்பு துண்டித்தல், அபராதம் விதித்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விடுதிகள்

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு, உணவகங்கள், திருமண மண்டபங்கள், விடுதிகள், கல்லூரிகள், ரெயில் நிலையம், வணிக வளாகங்கள் மற்றும் 200-க்கு மேற்பட்ட படுக்கைகள் கொண்ட தனியார் ஆஸ்பத்திரிக்குள் உள்ள கேன்டீன்கள், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் வளாகத்திற்கு உருவாகும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதற்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.தங்களது வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். திருச்செந்தூர் நகர் பகுதியினை குப்பையில்லா நகரமாக்க நம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்