தூத்துக்குடி
திருச்செந்தூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி
|திருச்செந்தூரில் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இடப்பிரச்சினை
திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியை சேர்ந்தவர் முனியாண்டி மனைவி அமுதேஸ்வரி (வயது 42). இவர்களது மகன் ஆறுமுகம் (20). இவர்களுடன் அண்ணி முறையான மாரியம்மாள் (60), முனியாண்டியின் தங்கை மகள் சினேகா (16) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
அமுதேஸ்வரி குடும்பத்துக்கும், அவரது கணவரின் தம்பி குடும்பத்துக்கும் இடையே இடம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை முயற்சி
இந்த விவகாரம் தொடர்பாக மனமுடைந்து காணப்பட்ட அமுதேஸ்வரி, ஆறுமுகம், மாரியம்மாள், சினேகா ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டில் இரவில் உணவில் எறும்பு பொடி மருந்தை கலந்து சாப்பிட்டனர். இதையறித்த அக்கம்பக்கத்தினர் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.