திருவாரூர்
திருவாரூரில், வெளிமாநில மீன்கள் விற்பனை அமோகம்
|மீன்பிடி தடைக்காலத்தையொட்டி திருவாரூரில் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மீன்கள் அமோகமாக விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தைவிட ரூ.100 வரை விலை குறைந்துள்ளது.
மீன்பிடி தடைக்காலத்தையொட்டி திருவாரூரில் வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் மீன்கள் அமோகமாக விற்பனையாகிறது. வரத்து அதிகரிப்பால் கடந்த வாரத்தைவிட ரூ.100 வரை விலை குறைந்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம்
பெரும்பாலான வீடுகளில் மீன், ஆடு, கோழி இறைச்சி இல்லாத அசைவ உணவுகளே இருப்பதில்லை. பண்டிகை காலங்கள், வார இறுதி நாட்கள் ஆகிய காலங்களில் எப்போதும் இறைச்சி விற்பனை அதிகளவில் இருக்கும். திருவாரூர் நகரில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இந்த மீன் கடைகளுக்கு நாகை, வேதாரண்யம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல், கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாள்தோறும் பைபர் படகில் குறைந்த தூரம் சென்று மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தாலும் திருவாரூருக்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் டன் கணக்கில் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
வரத்து அதிகரிப்பால் விலை குறைவு
மீன்கள் வரத்து தொடர்ந்து இருந்ததால் அதன் விலை கடந்த 1 வாரமாக குறைந்து காணப்பட்டது. கடந்த வாரம் ரூ.300-க்கு விற்கப்பட்ட சங்கரா மீன் ரூ.200-க்கும், இலங்காமீன் ரூ.150-க்கும், நாட்டுக்கெண்டை ரூ.150-க்கும், இறால் மற்றும் நண்டு ரூ.300-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் அருகில் உள்ள குளம் மற்றும் ஆறுகளில் இருந்து மீன்களை பிடித்து மீன்கடைகளில் விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், திருவாரூருக்கு வழக்கமாக 4 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தற்போது மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் போதிய மீன்கள் நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருவதில்லை. ஆனால் கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் லாரிகளில் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. தடைக்காலம் அமலில் இருந்தாலும் மீன்கள் வரத்து எப்போதும் போல் உள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்கள் விலை ரூ.100 வரை குறைந்துள்ளது என்றார்.