< Back
மாநில செய்திகள்
திருவாரூரில், 105 டிகிரி வெயில் கொளுத்தியது
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், 105 டிகிரி வெயில் கொளுத்தியது

தினத்தந்தி
|
16 May 2023 12:15 AM IST

திருவாரூரில் அக்னி நட்சத்திரம் உக்கிரத்தை காட்டியதால் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.


திருவாரூரில் அக்னி நட்சத்திரம் உக்கிரத்தை காட்டியதால் 105 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

அக்னி நட்சத்திரம்

கோடை காலம் தொடங்கியது முதல் திருவாரூரில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே காணப்பட்டது. இடைஇடையே அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழையினால் வெப்பம் தணிந்திருந்தது. இதற்கிடையில் கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் நிலவும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மழையும் பெய்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்ற ஒருவித கலக்கத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் வெயில் தனது உக்கிரத்தை காட்ட தொடங்கிவிட்டது. கடந்த ஒரிரு நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரித்தது. தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.

வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்

திருவாரூர் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வெயில் கொடுமையினால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கினால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். இந்த வெயில் கொடுமையால் பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதையும் பொருட்படுத்தாமல் சென்றவர்கள் குடை பிடித்து கொண்டும், முகத்தில் துணியை மூடி கொண்டும் சென்றனர். வெளியில்தான் இந்த நிலைமை என்றால், வீடுகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பகல் நேரத்தில் வெயில் கொடுமை என்றால், இரவில் வெப்பத்தின் தாக்கத்தினால் புழுக்கம் அதிகமாக இருந்தது.

105 டிகிரி கொளுத்தியது

இரவு நேரங்களில் மின்விசிறியில் இருந்து வரும் காற்றும் அனல்காற்றாகவே வருகிறது. நேற்றும் வெயில் அதிகமாக காணப்பட்டது. திருவாரூரில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினர். பஸ் நிலையங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்த வெப்பத்துக்கு மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகளும் அவதிப்பட்டு வருகின்றன.

இளநீர், நுங்கு விற்பனை

ஆடு, மாடுகள் சாலையோரத்தில் உள்ள மரங்களின் நிழல் அல்லது பெரிய கட்டிடங்களின் நிழலில் தஞ்சம் அடைவதை காண முடிந்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள சாலையோரங்களில் உள்ள பதநீர் கடைகள், நுங்கு, வெள்ளரிப்பிஞ்சு, தர்ப்பூசணி, கிர்ணி பழங்கள், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ், கரும்பு ஜூஸ் போன்ற கடைகளை நாடினர். இதனால் குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்