தேனி
தேனி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
|தேனி மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ண ஜெயந்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், கணேச கந்தபெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மக்கள் பலர் சாமி தரிசனம் செய்தனர்.
அதுபோல் மக்கள் பலரும் தங்களின் வீடுகளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணன், ராதை வேடமிட்டு மகிழ்ந்தனர். வீடுகளில் குழந்தைகளின் கால்தடத்தை பதித்தும், கிருஷ்ணனை வழிபட்டனர். போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சந்தன கோபாலகிருஷ்ணன் சுவாமி, சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர் சீனிவாச பெருமாள் குருவாயூர் கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் ஏராளமான சிறுவர்கள் கிருஷ்ணர் வேடமணிந்து பங்கேற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு அலங்காரம்
இதேபோல் குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவைனிடி இந்தியா டிரஸ்ட் சார்பில் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று காலை கோ-பூஜை, அகண்ட நாம கீர்த்தனம், கிருஷ்ணர்-மாதுரிதேவிக்கு சிறப்பு திருமஞ்சனம், அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதையடுத்து 1008 நாமம் எழுதிய பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 28-ந்தேதி வரை பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நாமத்வார் பிரார்த்தனை மைய பொறுப்பாளர் ஸ்ரீ கிருஷ்ண சைதன்யதாஸ் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.