< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:இன்று தொடங்குகிறது
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில்18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்:இன்று தொடங்குகிறது

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்குகிறது.

மருத்துவ முகாம்

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.

வட்டாரத்துக்கு ஒரு இடம் வீதம் 8 இடங்களில் முகாம்கள் நடக்கிறது. அதன்படி இன்று தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், நாளை (புதன்கிழமை) ஆண்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் முகாம் நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) போடி ஜ.கா.நி மேல்நிலைப்பள்ளி, 13-ந்தேதி சின்னமனூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, 17-ந்தேதி உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, 18-ந்தேதி கம்பம் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி, 19-ந்தேதி பெரியகுளம் எட்வர்ட் நினைவு நடுநிலைப்பள்ளி, 20-ந்தேதி மயிலாடும்பாறை ஜி.ஆர்.வி.மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.

உதவி உபகரணங்கள்

இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்குதல், தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உதவி உபகரணங்கள் மற்றும் பிற உதவிகள் பெறுவதற்கு ஆலோசனை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் தொடர்பான கோரிக்கை குறித்து பதிவு செய்தல் ஆகியவை நடக்கின்றன.

முகாமில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6, ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்