< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்குருத்தோலையுடன் பவனி சென்ற கிறிஸ்தவர்கள்
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில்குருத்தோலையுடன் பவனி சென்ற கிறிஸ்தவர்கள்

தினத்தந்தி
|
3 April 2023 12:15 AM IST

தேனி மாவட்டத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி குருத்தோலையுடன் கிறிஸ்தவர்கள் பவனி சென்றனர்.

குருத்தோலை ஞாயிறு

கிறிஸ்தவர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஈஸ்டர் பண்டிகை திகழ்கிறது. ஈஸ்டர் பண்டிகையையொட்டி, இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது.

தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் ஜெருசலேம் நகருக்குள் நுழைந்ததை நினைவுகூரும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு என்று கிறிஸ்தவர்கள் குருத்தோலையுடன் பவனி செல்வது வழக்கம்.

பிரார்த்தனை-பவனி

அதன்படி, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள சி.எஸ்.ஐ. புனித பவுல் கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்து குருத்தோலை பவனி நேற்று காலை தொடங்கியது. சபை குரு அஜித் ஸ்டான்லி தலைமையில் இந்த பவனி நடந்தது. கிறிஸ்தவர்கள் தங்களின் கைகளில் குருத்தோலையை ஏந்தியபடி, கீர்த்தனை பாடலை பாடியபடி பங்கேற்றனர்.

இந்த பவனி என்.ஆர்.டி. சாலை, பெரியகுளம் சாலை, பழைய அரசு மருத்துவமனை சாலை, சமதர்மபுரம் வழியாக மீண்டும் கிறிஸ்தவ ஆலயத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நற்கருணை ஆராதனை நடந்தது.

அதுபோல், தேனி மதுரை சாலையில் உள்ள ஆர்.சி. கிறிஸ்தவ ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறையொட்டி பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

Related Tags :
மேலும் செய்திகள்