தேனி
தேனி மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு
|தேனி மாவட்டத்தில் 1 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி கடந்த 1-ந்தேதி தொடங்கியது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்றும், மக்கள் விருப்பத்தின் பேரில் இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் நேற்று முன்தினம் இரவு வரை 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மாவட்டத்தில் பல இடங்களிலும் இந்த பணிகள் மந்தமாக உள்ளன. மக்களிடமும் போதிய விழிப்புணர்வு மற்றும் ஆர்வமின்மை காரணமாக ஆதார் இணைப்பு பணி மந்தமாகவே நடந்து வருகிறது.
களம் இறங்கிய பள்ளிகள்
இதனால் ஆதார் எண் இணைப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் களம் இறக்கப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மூலமாக பெற்றோரின் ஆதார் அடையாள அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகலை பெறும் பணி நேற்று நடந்தது.
இதற்காக நேற்று முன்தினம் பள்ளி நிர்வாகங்கள் சார்பில், மாணவர்களின் பெற்றோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும், சுற்றறிக்கை வாயிலாகவும் பெற்றோர்களின் ஆதார், வாக்காளர் அட்டை நகலை மாணவ, மாணவிகள் மூலமாக பள்ளிக்கு கொடுத்து அனுப்புமாக அறிவுறுத்தப்பட்டது.