< Back
மாநில செய்திகள்
தேனி மாவட்டத்தில்தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
தேனி
மாநில செய்திகள்

தேனி மாவட்டத்தில்தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

தினத்தந்தி
|
2 Jan 2023 6:45 PM GMT

தேனி மாவட்டத்தில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர் நகை பறிப்பு

தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்த தினகரன் மனைவி ஜீவரத்தினம் (வயது 66). கடந்த 25-ந்தேதி அதிகாலையில் இவர், பங்கஜம் ஹவுஸ் தெருவில் உள்ள யோகாசன ஆலயத்தில் மார்கழி மாத பஜனையில் பங்கேற்க சென்றார். பஜனை முடிந்தவுடன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஜீவரத்தினம் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

அதே நாளில் பழனிசெட்டிபட்டியில் பெட்டிக்கடை நடத்தும் ராமசாமி மனைவி சரஸ்வதி (70) என்பவரிடம் 2 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர். மேலும் அதே நாளில் க.விலக்கில் நடந்து சென்ற பெண்ணிடம் அதே போல் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

2 பேர் கைது

ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேனி, பழனிசெட்டிபட்டி, க.விலக்கு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், ஆண்டிப்பட்டி அருகே கொண்டமநாயக்கன்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஜீவன் செல்லப்பா (19), மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எருமார்பட்டியை சேர்ந்த பிரேம்குமார் (21) ஆகிய இருவரும் சேர்ந்து பழனிசெட்டிபட்டியில் நகை பறித்ததாக தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடியபோது அவர்கள் கோவாவில் இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கோவாவுக்கு தனிப்படையினர் விரைந்தனர். அங்கு தங்களின் நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பிரேம்குமார், ஜீவன் செல்லப்பா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கொண்டு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பழனிசெட்டிபட்டி, தேனி, க.விலக்கு ஆகிய 3 இடங்களிலும் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டனர்.

புதரில் கிடந்த நகை

கைதான இருவரிடமும் தொடர்ந்து விசாரணை செய்தபோது, பழனிசெட்டிபட்டியில் பறித்த 2 பவுன் சங்கிலி கவரிங் என்பதால் அதை அதே பகுதியில் புதரில் வீசியதாக தெரிவித்தனர். பின்னர் அது வீசப்பட்ட புதர் பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அந்த சங்கிலி சிக்கியது. அதை நகை மதிப்பீட்டாளரிடம் கொடுத்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அது தங்கம் தான் என்று தெரியவந்தது.

இதை கேள்விப்பட்ட திருடர்கள் இருவரும், 'தங்கத்தை கவரிங் என்று நினைத்து புதரில் வீசிவிட்டோமே' என்று போலீசாரிடம் ஏமாற்றத்தை பதிவு செய்தனர். அந்த நகை உள்பட மொத்தம் 8 பவுன் நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்கள் மேலும் ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்