தேனி
தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் பயனடைந்த 2¾ லட்சம் பேர்
|தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் இதுவரை 2¾ லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
108 ஆம்புலன்ஸ்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்திலும் இந்த சேவை தொடங்கியது. மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது தேனி மாவட்டத்தில் 27 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில் அதிநவீன உயிர் காக்கும் கருவிகள் கொண்ட 2 ஆம்புலன்ஸ்கள், அடிப்படை உயிர்காக்கும் கருவிகள் கொண்ட 23 ஆம்புலன்ஸ்கள், குழந்தைகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல 2 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன.
2¾ லட்சம் பேர் பயன்
தேனி மாவட்டத்தில் சேவை தொடங்கிய நாள் முதல் தற்போது வரை 2 லட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பயன்பெற்றுள்ளனர். இதில், பிரசவ தேவைக்கு மட்டும் 68 ஆயிரத்து 703 பேர் இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியுள்ளனர். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட 47 ஆயிரத்து 888 பேரும், இதர மருத்துவ அவசர தேவைக்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 903 பேரும் சேவையை பயன்படுத்தி உள்ளனர்.
அதுபோல், பிரசவத்துக்காக அழைக்கப்பட்டவர்களில் 294 கர்ப்பிணிகளுக்கு அவசர மருத்துவ உதவியாளரின் உதவியுடன் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், பிரசவ அவசர அழைப்புக்காக அழைக்கப்பட்டவர்களில் அவசர மருத்துவ உதவியுடன் 245 கர்ப்பிணிகளுக்கு அவர்களின் வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டு, பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இத்தகவலை தேனி மாவட்ட 108 ஆம்புலன்ஸ் மேலாளர் பிரகாஷ் தெரிவித்தார்.