தேனி
தேனி மாவட்டத்தில்13,240 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதினர்
|பிளஸ்-1 தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்தொடர்ச்சியாக நேற்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 52 மையங்களிலும், தனித்தேர்வர்களுக்கு 3 மையங்களிலும் தேர்வு நடந்தது.
மாவட்டத்தில் 142 பள்ளிகளை சேர்ந்த 7,183 மாணவர்கள், 7,175 மாணவிகள் என மொத்தம் 14,358 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். நேற்று நடந்த தமிழ் பாடத்துக்கான தேர்வை 6,515 மாணவர்கள், 6,725 மாணவிகள் என மொத்தம் 13,240 பேர் எழுதினர். அனுமதி பெற்றவர்களில் 668 மாணவர்கள், 450 மாணவிகள் என 1,118 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தனித்தேர்வர்கள்
தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 93 ஆண்கள், 96 பெண்கள் என 189 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 80 ஆண்கள், 84 பெண்கள என 164 பேர் எழுதினர். தனித்தேர்வர்களில் 25 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அமைதியான முறையில் நடந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். பார்வைத்திறன் குறைபாடு மற்றும் தேர்வு எழுத முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். பறக்கும் படை குழுவினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.