தேனி
தேனி அல்லிநகரம் நகராட்சியில்உரிமம் இன்றி இயங்கும் 3 ஆயிரம் தொழில் நிறுவனங்கள்
|தேனி அல்லிநகரம் நகராட்சியில் உரிமம் இன்றி 3 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் இயங்குவதாக ஆணையர் தெரிவித்தார்.
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் தொழில் நடத்துவோர், அனைத்து விதமான வணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், அனைத்து விதமான பொருட்கள் தயாரிப்பு, இருப்பு வைத்தல் மற்றும் விற்பனை செய்தல், அனைத்து விதமான உணவு பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகம். மின்சக்தி மற்றும் ஜெனரேட்டர் பயன்படுத்தி தொழில் புரிவோர் மற்றும் இதர அனைத்து விதமான வணிக நிறுவனங்களும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் -1998 பிரிவு 102 மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சிகள் விதிகள் எண் 289-ன் படி உரிமம் பெறுவது கட்டாயமாகும்.
மேலும் புதிதாக தொழில் தொடங்குவோர் மேற்கண்ட சட்ட விதிகளின் படி நகராட்சியில் உரிமம் பெற்ற பின்னரே தொடங்க வேண்டும். ஆனால், தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உரிய தொழில் உரிமம் பெறாமலும், உரிமத்தை புதுப்பிக்காமலும் தொழில் நடத்தி வருவது கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இச்செயல் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி சட்ட விதிகளின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, நகராட்சி பகுதியிலுள்ள உரிமம் பெறாத மற்றும் உரிமம் புதுப்பிக்காத தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் வருகிற 30-ந்தேதிக்குள் நகராட்சி பொது சுகாதார பிரிவில் உரிய படிவத்தில் உரிய தொழில் உரிமக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்து உரிமம் பெற வேண்டும். இதற்கு tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். தவறும் பட்சத்தில் உரிமம் இல்லாத நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.