தேனி
திம்மரசநாயக்கனூர் கிராமத்தில்ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்:கலெக்டரிடம், எம்.எல்.ஏ. தலைமையில் மக்கள் மனு
|திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் தலைமையில், திம்மரசநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "திம்மரசநாயக்கனூரில் உள்ள ஜக்காளம்மன் கோவிலில் திருவிழா தைமாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நடந்து வந்தது. பின்னர் ஜல்லிக்கட்டு நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டும் பாரம்பரிய வழக்கப்படி ஜக்காளம்மன் கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் தாய் கிராமம் 18 கிராமங்களுக்கு முதன்மை கிராமமாக செயல்படுகிறது.
எங்கள் ஊரின் பெயரை இந்த ஆண்டு அரசு இதழில் வெளியிட்டு, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து, பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நாங்கள் தமிழக அரசின் சட்டத்தின்படி ஜல்லிக்கட்டு நடத்தவும், மாவட்ட கலெக்டர் அளிக்கும் விதிமுறைகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்புடன் நடத்தவும் தயாராக உள்ளோம். எனவே, கலெக்டர் எங்கள் ஊருக்கு நேரில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.